"சாதி"தான் இங்கு சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்... If caste is deemed to be society, let poison spread in the air...

Snakes Introduction – பாம்புகள் அறிமுகம்

Snakes Introduction – பாம்புகள் அறிமுகம். பாம்புகளைப்பற்றி அறியாதவர்கள் யாருமே இருக்க முடியாது என்றாலும் பாம்புகளைப்பற்றி அனைவரும் தெரிந்திருக்க வேண்டிய சில அடிப்படை உண்மைகளைப்பற்றி இங்கு ஆராய்வோம்.

பாம்புகளை இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவற்றில் ஒன்று நாம் சாதாரணமாக குறிப்பிடும் “பாம்புகள்”. மற்றொன்று “நாகங்கள்”.

பாம்பும் நாகமும் ஒன்றுதானே… பாம்பின் மற்றொரு பெயர்தானே “நாகம்”. அப்படியிருக்க அதை தனித்தனியாக பிரித்து கூறவேண்டிய அவசியம் என்ன என்கிறீர்களா?…

அதுவும் சரிதான்…

இதனை புரிந்துகொள்ள வேண்டுமென்றால்…. ஒன்றை கூறலாம்… உலகிலுள்ள அனைவருமே மனிதர்கள்தான். ஆனால் அந்த மனிதர்களுக்குள்ளும் “தமிழர் என்று ஒரு இனமுண்டு தனியே அவருக்கு ஒரு குணமுண்டு” என இன ரீதியாக வகைப்படுத்துகிறோம் அல்லவா.

அதுபோல,… அனைத்துமே பாம்புகள்தான். ஆனால் அந்த பாம்புகளுக்குள்ளே உள்ள சில விஷேச தன்மைகள் மற்றும் குணங்களை அடிப்படையாகக் கொண்டு சிலவகை பாம்புகளை “நாகங்கள்” என்ற பெயரில் தனிப்படுத்தி இனம் காணுகின்றோம்.

அதாவது நாகங்கள் என்பவை பாம்புகளில் உள்ள ஒரு தனித்த தனித்துவமான இனமாகும்.

இன்னும் புரியும்படி சொல்ல வேண்டுமென்றால் அனைத்து நாகங்களும் பாம்புகள்தான்… ஆனால்,.. அனைத்து பாம்புகளும் நாகங்கள் அல்ல…

Snakes Introduction – பாம்புகள் – நாகங்கள்

சரி,.. பாம்புகளுக்கும், நாகங்களுக்கும் உள்ள சில வேறுபாடுகளைப் பார்ப்போமா!..

பாம்புகள்

  • இதில் ஆயிரக்கணக்கான பாம்பு இனங்கள் உள்ளன. அவைகளில் சில நச்சுத்தன்மை உள்ளவை. பல நச்சுத்தன்மை இல்லாதவை.
  • ஆபத்து காலங்களில் தப்பி ஓடவோ அல்லது மறைந்து கொள்ளவோ முயற்சிக்கும். சில பாம்புகள் மட்டுமே எதிரிகளை கண்டால் பயம்கொள்லாமல் எதிர்த்துநின்று சீறும்.
  • கட்டுவிரியன், கண்ணாடி விரியன், மலைப்பாம்பு, தண்ணீர் பாம்பு மற்றும் சாரைப்பாம்பு இவைகளெல்லாம் பாம்பு பிரிவில் வருபவை.

நாகங்கள்

  • நாகங்கள் என சொல்லப்படும் அனைத்து பாம்புகளும் கொடூரமான விஷங்களை கொண்டவைகள்தான்.
  • ஆபத்து காலங்களிலோ அல்லது எதிரிகளை சந்திக்கும்போதோ பயந்து ஓடுவதில்லை. மாறாக எதிர்த்துநின்று சீறுவது மட்டுமல்ல, கழுத்து பகுதியை விரித்து ஒண்டிக்கு ஒண்டி வாரீயா என்கிற ரீதியில் படம் எடுத்து மிரட்டும்.
  • படம் எடுக்கும்போது “உஸ்” என்ற சத்தத்தை எழுப்பி எதிரியை எச்சரிக்கும். அதாவது ஒலி, ஒளி, கதை, திரைக்கதை, வசனம், டைரக்சன் அனைத்துமே நாகங்கள்தான். ஆனால் கிளைமாக்ஸ் மட்டும் உங்கள் தலைஎழுத்தை பொறுத்து அமையும்.
  • நல்லபாம்பு, ராஜநாகம் போன்ற பாம்புகள் நாகங்கள் பிரிவில் வருகின்றன.

நாம் இந்த பதிவில் நாகம் என்னும் தனித்துவமான பம்பினத்தை தவிர்த்து சாதாரண பாம்புகளை பற்றி மட்டும்தான் பார்க்க இருக்கின்றோம்….

நாகத்தை பற்றி பிறிதொரு பதிவில் பார்க்க இருக்கின்றோம்.

வாருங்கள் பாம்புகளின் தனித்தன்மைகளைப்பற்றி ஆராய்வோம்.

பாம்புகள் பொதுவாக ”சர்ப்பம்’‘ என்றும் ”அரவம்” என்றும் அழைக்கப்படுகின்றன.

Snakes babu

பாம்பு ஊர்வன இனத்தை சேர்ந்த முதுகெலும்புள்ள ஒரு விலங்காகும். இதன் முதுகெலும்பு 200 முதல் 400 எலும்புகளால் கோர்க்கப்பட்டுள்ளன. இவை குளிர் இரத்த பிராணி ஆகும்.

இவைகளை விஷத்தன்மையுள்ளவை மற்றும் விஷத்தன்மை இல்லாதவை என இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். பாம்புகள் தன் விஷத்தை இரைகளை வேட்டையாடவும், எதிரிகளிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவும் பயன்படுத்துகின்றன.

உலகளவில் பாம்புகளில் 2,500 கும் அதிகமான வகைகள் உள்ளன. இதில் வெறும் 5 சதவீத பாம்புகளே விஷத்தன்மை வாய்ந்தவை. அதாவது சுமார் 600 வகையான பாம்புகளே நச்சுத்தன்மை வாய்ந்தவை.

இந்தியாவில் மட்டும் 230 வகையான பாம்பு இனங்கள் உள்ளன. அவைகளில் 50 க்கும் குறைவான இனங்களே விஷத்தன்மை வாய்ந்தவையாகும்.

இந்தியாவில் உள்ள பாம்புகளில் கட்டுவிரியன், கண்ணாடி விரியன் போன்றவை கொடிய நச்சுப்பாம்புகள் ஆகும். சிலவகை பாம்புகளின் விஷங்கள் நேரடியாக நரம்பு மண்டலத்தையும் சிலவகை பாம்புகளின் விஷங்கள் குருதி உறைதலையும் தடுத்து மரணத்தை ஏற்படுத்துகின்றன.

நிலப்பரப்பில் பாம்புகள் வாழ்வதுபோல் நீரில் வாழும் பாம்புகளும் உள்ளன. நீரில் வாழும் பாம்புகளில் அதிக விஷ தன்மையுள்ள பாம்பு எது என்றால் அது கடலில் வாழும் ”Belcher snake” தான்.

பாம்புகள் - Snakes Introduction - Sea snake

கடல் பாம்புகளில் பலவகைகள் இருக்கின்றன என்றாலும் உடலில் கருப்பு, வெள்ளை வரிகளைக் கொண்ட இந்த பாம்புதான் மிகக் கொடூரமான விஷத்தை தன்னகத்தே கொண்டுள்ளது.

நிலத்தில் வாழும் சில பாம்புகள் நீரிலும் நன்றாக நீந்தும் தன்மையைப் பெற்றுள்ளன.

Snakes Introduction – பாம்புகள் அறிமுகம். பெரும்பான்மையான பாம்புகளின் தோல்கள் செதில்கள் போன்ற அமைப்பினால் ஆனது.

பாம்புகளுக்கு இரு நுரையீரல்கள் இருந்தாலும் அதில் ஒன்றுதான் வேலை செய்கிறது. மற்றொன்று மிகவும் சிறுத்து காணப்படுகிறது.

பொதுவாகவே பிற உயிரினங்களுடன் ஒப்பிடும்போது பாம்பின் நுரையீரல்கள் மிகச் சிறியது. அதிலும் இடது நுரையீரல்கள் வலது பக்க நுரையீரலை விட மிகச்சிறியது. சில பாம்புகளுக்கு இடது நுரையீரல்கள் இருப்பதில்லை.

எனவே, பெரும்பாலும் பாம்பினங்கள் ஒரேயொரு நுரையீரல் அதுவும் வலதுபக்க நுரையீரலுடன் மட்டுமே வாழ்க்கை நடத்துகின்றன.

பாம்பின் நாக்குகள் இரண்டாகப் பிளவுபட்டுக் காணப்படுகின்றன. பாம்புகள் உணவு இருக்கும் இடத்தை நாக்கின் மூலமாகவே உணர்கின்றன.

நாக்கை வெளியே நீட்டும்போது உணவுகளின் மெல்லிய வாசனை துகள்கள் அதன் நாக்கில் ஒட்டிக்கொள்கின்றன. பின் அது நாக்கை உள்ளிழுத்து வாயின் உள்புறமுள்ள ”ஜேகப்ஸன்” [Jacobson’s] என்ற பகுதிக்கு கொண்டுசெல்கிறது.

அங்கு உணவு துகள்களின் வாசனை துல்லியமாக அளவிடப்பட்டு உணவின் தன்மை, இருப்பிடம் கணிக்கப்படுகிறது. எனவேதான் பாம்புகள் அடிக்கடி நாக்கை வெளியே நீட்டுகின்றன.

Snakes Introduction snake Tongue

பாம்பின் நாக்கு இரண்டு பகுதிகளாக பிளவு பட்டிருப்பதற்குக் காரணம். V வடிவத்தில் இரு திசைகளில் நீட்டப்படும் பிளவில் எந்த பக்க பிளவில் அதிக வாசனை துகள்கள் ஒட்டுகிறதோ அந்த திசையில் உணவு இருக்கிறது என்பதனை அதனால் எளிதாக ஊகித்துக் கொள்ள முடியும். அதனால்தான் இந்த ஏற்பாடு.

பாம்பிற்கு காதுகள் கிடையாது. அதாவது புறச்செவி, செவித்துளை, செவிப்பறை என எதுவுமே இல்லை. அப்படியென்றால் பாம்பிற்கு காது கேட்காதா என்றால்… கேட்கும் எப்படி என்கிறீர்களா?

நம்மைப்போல ”K.P . சுந்தராம்பாள்” பாடலை இனிமையாக தாள சுருதியுடன் ரசித்து கேட்க முடியாது. மாறாக ஒலியின் அதிர்வுகளை உணர்ந்துகொள்ள முடியும் அவ்வளவே.

பாம்பின் கபால எலும்புகளில் ஒன்றான ”குவாட்ரேட்” பகுதியும், ”காலுமல்லா” என்ற குருத்தெலும்பு பகுதியும் ஒட்டி இணைந்து காணப்படுகின்றன. இந்த அமைப்பு மிகவும் தொலைவில் ஏற்படும் மெல்லிய அதிர்வுகளைக்கூட உணர்ந்துகொள்ளும் வகையில் உள்ளன.

எனவே அது தரையில் ஏற்படும் மெல்லிய அதிர்வுகளைக்கூட உடல் வழியாக உள் காதிற்கு அனுப்பி ஓசைகளை உணருகின்றன.

100 Hz முதல் 700Hz வரையுள்ள அதிர்வுகளை உணரும் திறன் பாம்புகளுக்கு உண்டு.

பாம்புகளின் கண்களில் இமைகள் கிடையாது. இதன் கண்கள் 90 டிகிரி பார்வை கோணத்தில் சுழலும் தன்மை கொண்டது.

பாம்புகளுக்கு கால்கள் இல்லாததால் அவைகள் உடலின் மூலமாகவே தரையை உந்தித்தள்ளி வேகமாக பயணிக்கின்றன.

அவ்வாறு பயணிக்கும்போது கரடுமுரடான தரையின் உராய்வினால் அவைகளின் உடலில் அடிக்கடி சிராய்ப்புகள், காயங்கள் ஏற்படலாம்.

இந்த ஆபத்துகளில் இருந்து தப்பிக்கவே அவைகளுக்கு வழவழப்பான செதில்கள் போன்ற சிராய்ப்புகள் ஏற்படுத்த முடியாத ஒருவிதமான மெல்லிய தோலை இயற்கை கொடுத்துள்ளது.

ஆனால் காலம் செல்லச்செல்ல இந்த தோல்பகுதி தன் பாதுகாப்புத் தன்மையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவிடுகின்றன. எனவே இதன் கீழடுக்குத் தோல் பாம்பின் பாதுகாப்பிற்கு புதிதாக பொறுப்பேற்றுக்கொள்ள இனியும் பயன்படுத்த முடியாத மேலடுக்குத்தோலை பாம்புகள் உரிந்தெடுத்து களைந்து விடுகின்றன.

Natternhemd

கண்களின் மேற்பகுதியில் கண்ணாடி போன்ற ஒளி ஊடுருவும் படலம் உள்ளது. இதன் வழியாகவே பாம்புகள் பார்க்கின்றன. எனவே எப்போதும் கண்ணாடி போட்டுக்கொள்ளும் உயிரினம் எது என்றால் பாம்பைக்  குறிப்பிடலாம். இவைகள் தோல் உரிக்கும்போது இந்த கண் படலத்தையும் சேர்த்தே உரிக்கின்றன.

இந்நிகழ்வு குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கும். இது பாம்பு தன்னைப் புதுப்பித்துக்கொள்ள எடுக்கும் ஒரு நடவடிக்கை எனலாம்.

அவைகள் தன் பாதுகாப்பிற்காகவும், சௌகரியத்திற்காகவும் செய்யும் இந்த நிகழ்வையே ‘‘பாம்பு சட்டை உரித்தல்” என்று குறிப்பிடுகிறோம்.

உணவுப்பழக்கம்

Snakes Introduction – பாம்புகள் அறிமுகம். எல்லா பாம்புகளுமே ஊணுண்ணிகள்தான். ஊர்வன, எலிகள், தவளைகள், விலங்குகள், பறவைகள், பறவைகளின் முட்டைகள் இவைகள்தான் இவைகளின் வழக்கமான ”தம்பிரியாணி”கள். சில நேரங்களில் மனிதர்களையும் இவைகள் ”கொத்துப்பரோட்டா” போடுவதுண்டு.

பிற விலங்குகளைப்போல பாம்புகள் தினந்தோறும் 3 வேளை உணவு எடுத்துக் கொள்வது இல்லை. முதல் தடவை சாப்பிட்ட உணவு நன்றாக செரித்த பின்பே அடுத்த உணவு எடுத்துக்கொள்ளும்.

பாம்புகள் உணவை வாயினால் நன்றாக மென்று கூழாக்கி சாப்பிடுவதில்லை. விலங்குகள், எலிகள், தவளைகள் மற்றும் பாம்புகளை முழுதாகவே விழுங்கி விடுகின்றன.

அவ்வாறு விழுங்கப்பட்ட விலங்குகளின் உடல்கள் மற்றும் எலும்புகள் முதலியன ஒரேநாளில் செரிப்பதில்லை

உணவாக்கப்படும் விலங்குகளின் எலும்புகள் ஜீரண நீரினால் முழுமையாக கரைக்கப்படுவதற்கு ஒரு வாரத்திற்குமேல் ஆகிவிடுகின்றன.

எனவே பாம்புகள் பெரும்பாலும் உணவின் தன்மையை பொறுத்து வாரத்திற்கு 1 தடவை அல்லது இரண்டு வாரத்திற்கு ஒரு தடவை மட்டுமே உணவு எடுத்துக்கொள்கின்றன.

நம்மைப்போல் தினம் 3 வேளை உணவு சாப்பிடுவதில்லை என்பதை நினைவில் கொள்ளவும்.

பாம்புகள் ஆண், பெண் இணைந்து இனவிருத்தியில் ஈடுபடுகின்றன.

சாரைப்பாம்பு மற்றும் நல்ல பாம்பு இரண்டும் இணைந்து ”ஜல்சா” செய்யும் என்பதெல்லாம் முட்டாள்தனம்.

சாரைப்பாம்பு என்பது “பாம்பு” இனத்தை சேர்ந்தது. நல்ல பாம்பு என்பது நாம் முன்பு பார்த்த “நாகம்” என்னும் இனத்தை சேர்ந்தது. எனவே இரண்டுமே பாம்புகள்தான் என்றாலும் பாம்பிலுள்ள இருவேறு இனங்கள். இரண்டிலும் ஆண் பெண் தனித்தனியாக உண்டு. எனவே இவை இரண்டும் இணைசேர்வதற்கு வாய்ப்பே இல்லை.

பாம்பினங்களில் ”குருட்டு பாம்பு” என்று ஒன்று இருக்கிறது. இதற்கு கண்களே கிடையாது. அதனால்தான் இதனை குருட்டுப்பாம்பு என அழைக்கிறோம்.

இவைகள் வெளிச்சமான இடங்களுக்கு வராமல் புதர்களுக்குள் இருட்டான இடங்களில் வாழ்கின்றன. எனவே இவைகள் பரம்பரை பரம்பரையாக வெளிச்சத்தையே அவ்வளவாக பார்க்காமலேயே வாழ பழகிக்கொண்டமையால் காலப்போக்கில் இவைகளின் கண்கள் பார்க்கும் சக்தியை இழந்துவிட்டன எனலாம்.

இதனைப் பொறுத்தளவில் “உலகம் ஒரு இருட்டறை”. எனவே இது மட்டும் ஆண் துணை இல்லாமல் தன்னிச்சையாக கருவுருகிறது.

பாம்புகள் - Snakes Introduction - blind snake

வரதட்சனை பிரச்சனை ஒன்ணும் இல்லீங்கண்ணா.. இந்த இனத்தில் ஆண் இனமே கிடையாது. அப்படியே ஆண் இனம் இருந்தாலும் இதற்கு சுத்தமாக கண் தெரியாது என்பதால் ‘மணாளன்’ இருக்கும் இடத்தை தேடி கண்டறிவது என்பது மகா கஷ்டம்.

ஆகையால் முறைப்படி கல்யாணம், கச்சேரி, பஸ்ட் நைட் இவைகளெல்லாம் நடப்பதற்கு வாய்ப்பே இல்லை. அதனால்தான் இயற்கை இதற்கு மணாளனே இல்லாமல் மக்கட்பேறு அடையும்படியான ஒரு ஏற்பாட்டை செய்து கொடுத்துள்ளது..

இந்த குருட்டு பாம்பு மட்டுமல்ல உலகில் உள்ள பல சிறிய உயிரினங்கள், சிலவகை கடல்வாழ் உயிரினங்கள், மற்றும் காடுகளில் வாழும் ஒருவகை பல்லி இனம் ஆகியன ஆண் துணையில்லாமலேயே சுய இனவிருத்தியில் ஈடுபடுகின்றன என்பதை இவ்விடத்தில் கவனத்தில் கொள்ளவும்.

இதன்மூலம் ஆண் என்ற ஒரு இனம் இல்லாமலேயே இந்த உலகில் உயிர்கள் பல்கிப்பெருகி வாழமுடியும் என்பது தெளிவாகிறது. எனவே ”நான் ஆண் பிள்ளையாக்கும்” என்று மீசையை முறுக்கிக்கொண்டு தம்பட்டம் அடிப்பதைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் நீங்கள் இல்லாவிட்டாலும் உலகமும் அதில் உயிரினங்களும் இயங்கிக்கொண்டுதான் இருக்கும்.

பாம்பு குட்டியும், முட்டையும்

Snakes Introduction – பாம்புகள் அறிமுகம். பாம்புகள் பெரும்பாலும் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றன. ஆனால் சிலவகை பாம்புகள் குட்டி போடுகின்றன.

பாம்பு முட்டையானது கோழிமுட்டை போல் கெட்டியான அல்லது எளிதில் உடையும் தன்மையுடன் கூடிய தோடுகளை கொண்டிருக்கவில்லை. மாறாக தோல் போன்று துவளும் தன்மையுடன் இருக்கின்றன. பாம்புகள் முட்டைகள் மீது ஊர்ந்து போகும்போது அது உடையாமல் இருக்க வேண்டுமென்பதற்காக இப்படி ஒரு ஏற்பாடு.

முட்டைக்குள்ளிருக்கும் பாம்பு குட்டிகளுக்கு மூக்கின் நுனியில் கூர்மையான ஒரு பல் போன்ற அமைப்பு இருக்கும். அதன் துணைகொண்டு முட்டையோட்டைக் கிழித்துக்கொண்டு வெளிவருகின்றன. சிலநாட்களில் இந்த தற்காலிக பல் தானாகவே விழுந்துவிடும்.

மலைப்பாம்புகள் 40 முதல் அதிகப்படியாக 100 முட்டைகள் வரை இடும். இவைகள் முட்டைகளை இறுக அணைத்தபடி அடைகாக்கின்றன. முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளிவர 28 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை தேவைப்படும்.

Snakes Introduction egg.

எல்லா உயிரினங்களிலும் இரண்டு தலை உள்ள குழந்தைகள் பிறப்பதுபோல் பாம்பினங்களிலும் இருதலை குட்டிகள் பிறப்பதுண்டு. உடல் ஒன்றுதான் இருக்கும் ஆனால் தலை மட்டும் இரண்டு இருக்கும்.

Snakes Introduction.

இரண்டு தலைகளும் தனித்தனியாக இயங்கக் கூடியவை என்றாலும் இரண்டும் ஒன்றாக செயல்பட்டால் மட்டுமே அவைகளால் தொடர்ந்து இயங்க முடியும். பொதுவாக இரட்டைத்தலை பாம்புகள் சில மாதங்களுக்கு மேல் உயிர் வாழ்வதில்லை.

பாம்பு வழிபாடு

இந்தியா, இலங்கை, சீனா, பாரசீகம், ஜப்பான், பர்மா,அரேபியா, எகிப்து, பெரு, கிரீஸ், அமெரிக்கா முதலிய நாடுகளிலெல்லாம் பாம்பு வழிபாடு நடை பெற்றதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.

இந்த வழிபாட்டு முறைகள்யாவும்  நம் முன்னோர்களுக்கு பாம்பின் மீதிருந்த பயத்தினால் ஏற்பட்டதாக இருக்கலாம். சில நாடுகளில் பாம்புகள் நல்ல தெய்வங்களாகவும் சில நாடுகளில் கெட்ட தெய்வங்களாகவும் வழிபடப்படுகின்றன.

அயர்லாந்து நாட்டில் பாம்புகளே இல்லை. அதற்கு காரணம் பைபிளில் ஏதேன் தோட்டத்தில் ஏவாளை ஒரு பாம்பு வஞ்சித்ததாக வருவதால் கிறிஸ்தவ சமயத்தில் பாம்புகள் தீய உயிரினமாக கருதப்படுகிறது.

”புனித பேட்ரிக்” என்பவர் அயர்லாந்தில் கிறிஸ்தவ மதத்தை பரப்ப சென்றபோது அவரின் முட்டாள்தனமான கட்டளையால் அங்குள்ள பாம்புகள் அனைத்தும் அழிக்கப்பட்டன.

தற்போது அயர்லாந்தில் பாம்புகள் இல்லாமல் போனதற்கு இதுவே காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

மனிதனுக்கு மதவெறி பிடித்துவிட்டால் ஒரு இனமே அழிந்து போகும் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.

வருங்காலத்தில் இதே போன்றதொரு அழிவிலிருந்து மனித இனமும் காப்பாற்றப்பட வேண்டுமெனில் நாம் மதவெறிகளில் இருந்து படிப்படியாக விடுபட வேண்டும்.

பாம்பை பற்றிய பழமொழிகள்

பாம்பைப் பற்றி பல பழமொழிகள் வழக்கத்தில் உள்ளன என்றாலும், கீழே உள்ள பழமொழிகள் மட்டுமே பிரபலமாக வழக்கத்தில் உள்ளன. அவை.

  • பாம்பின் கால் பாம்பறியும்.
  • பாம்பென்றால் படையும் நடுங்கும்.
  • விதி முடிந்தவனைத்தான் விரியன் கடிக்கும்.

இதுவரை பாம்பினங்களின் பொதுவான குணங்களை மட்டுமே பார்த்தோம். இனிவரும் பதிவுகளில் ஒவ்வொரு வகையான பாம்புகளைப்பற்றியும் தனித்தனியாக விரிவாக பார்க்கலாம்.

பாம்புகளின் பொதுவான சில விஷயங்களை தெரிந்துகொண்ட நீங்கள் பாம்பு மற்றும் நாகங்களுடைய விஷத்தின் தன்மைகளைப் பற்றியும் அறிந்துகொள்ள வேண்டும்தானே. எனவே பாம்பு மற்றும் நாகங்களின் விஷத்தின் தன்மைகளைப்பற்றி அறிந்துகொள்ள தட்டுங்க.

>> “பாம்பு விஷம் – ஒரு அறிமுகம் – An Introduction to Snake Venom.” <<

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!